புதன், ஏப்ரல் 20, 2016

முருகன் என்றால் அழகு...அழகன் என்றால் முருகன்...இந்த அழகனின் மற்ற பெயர்களை தெரிந்து கொள்ளலாமே!
1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.
2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.
3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.
4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.
5. குருபரன்: கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.
6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.
7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.
8. கந்தன்: கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.
9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.
10. சரவணபவன்: சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.
11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.
12. சுரேஷன்: தேவர் தலைவன் சுரேசன்.
13. செவ்வேள்: செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.
14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.
15. சேயோன்: சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.
16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.
17. வேலவன், வேலன்: வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.
18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.
19. சோமாஸ்கந்தன்:  ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.
20. சுப்ரமணியன்: சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.
21. வள்ளற்பெருமான்: முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.
22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.
23. மயில்வாகனன்: மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.
~ வழங்கியவர். திரு. சுரேஷ் பூமாலை, பொள்ளாச்சி


வெள்ளி, ஏப்ரல் 15, 2016

 ஸ்ரீ ராமநவமி
(15-04-2016)
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது. அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு.


ஆனால் நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது அவருக்கு பெரும் மனக்குறை. வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தில் கிடைத்த பாயசத்தை தசரதர் தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர். பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகுணன் ஆகியோர் பிறந்தனர். தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதி லையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார்.


கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார். பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார். சீதையை தீக்குளிக்க செய்து புஷ்பக விமானத்தில் அழைத்து கொண்டு, அயோத்தி சென்று முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார். ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும்.


வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும்.


அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.


நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை’ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர். இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.


ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின் பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள். ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்ற போதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார்.


அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார். கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம். ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
~ திரு.சுரேஷ் மும்மூர்த்தி, திருப்பூர்

வியாழன், ஏப்ரல் 14, 2016


துர்முகி தமிழ்ப்புத்தாண்டும் வழிபாட்டு முறையும்!
துர்முகி தமிழ்ப்புத்தாண்டு வியாழக்கிழமை பிறக்கிறது. துர்முகி என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. துர்முகி என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. துர்முக என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஹயக்ரீவர்.
ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான். இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால்,ஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு துர்முகி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.
தமிழ்ப்புத்தாண்டு அன்று என்ன செய்ய வேண்டும்?
தமிழ்ப்புத்தாண்டு சித்திரை மாதம் (ஏப்ரல் 14) முதல் தேதி மிகவும் சிறப்பான நாள். அன்றைய தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகளை அணிந்து கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வர். எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும். சகல நற்காரியங்களையும், செய்வதற்கேற்ற காலம் இது. தமிழ் வருடப்பிறப்பான சித்திரை மாதம் முதல் நாளை கேரள மக்கள் கொன்னம்பூ வைத்து பூஜிக்கின்றனர்.
கேரளாவில் சித்திரை விஷுவன்று கனி காண்பது மரபு. பங்குனி கடைசி நாள் அன்று இரவு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூச்சூடுவர். கோலமிட்ட மனைப்பலகையில் முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலைபாக்கும், இன்னொன்றில் கிண்ணங்களில் அரிசிபருப்பு, தங்க, வெள்ளிக் காசுகள், ஆபரணங்களும் வைப்பர். இன்னொரு தாம்பளத்தில் முக்கனிகளை வைப்பர். செவ்வாழை, நேந்திரம் வாழை, பலாப்பழம், கொன்றைப் பூச்சரம், தென்னம் பூ கொத்தும் வைக்கப்படும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து பூஜை அறைக்கு வந்து குத்துவிளக்கேற்றுவார். சுவாமியை வணங்கியபின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி கண்மூடிவரச் செய்து பூஜை அறையில் கண்திறந்து காண வைப்பதுதான் விஷூக்கனி காணல். பின் எல்லாருக்கும் காசு தருவார். இதை கை நீட்டம் என்பர். பின், அவரிடம் ஆசி பெறுவர். நீராடியபின் புத்தாடை அணிந்து கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தபின் அறுசுவை உணவு உண்பர்.